HIGHLIGHTS
A+ R A-
phrases
வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும்
திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஒரு நிலவுடைமைச் சமூகமாகும். அச்சமூகத்தில் பெண்கள் இல்லத்திற்குரியவர்களாக மட்டுமே இருந்துள்ளனர். ஆண்கள் புற உலகில் செல்வாக்குடன் ஆதிக்கம் பெற்றும் இருந்துள்ளனர். அச்சமூகச் சூழலில் அறம் உரைக்கப் பாடிய திருக்குறளில் அக்காலப் பெண்களின் வாழ்வியல் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள பெண்மைக் குணமான கற்பு, ஒழுக்கம், கணவன் மனைவி உறவு, இல்லத்தைப் பேணும் பண்பு முதலானவற்றை இக்காலப் பெண்ணியப் பார்வையில் இங்குக் காணலாம்.
கற்புத்தன்மை
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின் - - - (குறள் 54)
இல்வாழ்வில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால் அம் மனைவியை விட வேறு செல்வம் கிடையாது.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் - - - (குறள் 56)
கற்புநெறியில் தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண் எனக் கூறப்பட்டுள்ளது. புராதனப் பொதுவுடைமைச் சமூகத்தில் பாலியல் வேறுபாடு இல்லாமல் உறவு வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். நிலவுடைமை வர்க்கம் தோன்றிய பின் சொத்துக்களைத் தம் வாரிசுக்குத்தான் கொடுக்க வேண்டும் என நினைத்து நிலவுடைமையாளர்கள் தம் குழந்தைதான் என்பதை நிரூபிக்கப் பெண்களைக் கற்பு என்னும் கோட்பாட்டில் நிலை நிறுத்தியுள்ளனர்.
இங்குதான் ஆணாதிக்கச் சமூகம் தோற்றம் பெறுகிறது. அக் கற்புக் கோட்பாட்டை வள்ளுவரும் தம் குறட்பாக்களில் கூறியிருப்பதால், அதை ஓர் ஆணாதிக்கச் சமூகக் கருத்தியலாகவே காண முடிகிறது. அக் கற்புக் கோட்பாடு இன்று மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது. "கற்பு என்ற கருத்தாக்கம் தேவையான ஒன்று என்பதை 95.5% மக்கள் கற்பு என்பது தேவையில்லாத சமுதாயக் கட்டுப்பாடு என்றும் அது மாயை என்றும், வெற்றுப் பந்தம் என்றும் கணித்துள்ளனர்." திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ஓர் ஆணாதிக்கச் சமூகமாகவே இருந்துள்ளதை அறிய முடிகிறது.
கணவன் - மனைவி உறவு
பண்டைக் காலச் சமூகத்தில் ஆண்கள் மிகுதியாக உழைப்பில் பங்கெடுத்ததால் அவர்களே சமூகத்தில் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டுள்ளனர். வள்ளுவர் வாழ்ந்த காலக் கட்டத்திலும் அதே நிலை என்பதால் பெண்கள் கணவனின் உழைப்பைச் சார்ந்தே வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அந்நிலையை வள்ளுவர் தன் படைப்பில் பதிவு செய்துள்ளார்.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு - - - (குறள் 58)
பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால் பெருஞ் சிறப்புடைய மேல் உலக வாழ்வைப் பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது. கணவனை வணங்கி அவனுக்கு ஏவல் பணி செய்யும் ஓர் அடிமைப் பெண்ணாக வற்புறுத்தப்படுவதைக் காண முடிகிறது.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - - - (குறள் 55)
கடவுளை வழிபடாது கணவனைத் தொழும் பெண் பெய் எனக் கூறின் மழை பெய்யும் என்பது கற்பு பற்றிய நடைமுறை விளக்கம். தெய்வத்தை விடக் கணவன் அதீத சக்தி படைத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். இது ஆண்களின் சமூக மேன்மையைக் காட்டுகிறது. பெண்கள் கணவனை வணங்கி, ஏவல் பணி செய்வதைத் தவிர சமூகத்தில் பிற பணிகளில் பங்கெடுத்ததாகக் காட்டப்படவில்லை.
இல்லமும் பெண்ணும்
தந்தை வழிச் சமூகத் தோற்றத்திற்குப் பின் பெண்களின் இயக்கத்தை இல்லறத்தில் நிலை நிறுத்தியுள்ளனர். அவர்களுக்கு "இல்லாள்", "மனையாள்", "வீட்டுக்காரி" என்ற இடம் கொடுத்து அவர்களை இல்லத்தில் அடைத்துள்ளனர். வீட்டில் கணவன், பிள்ளை, விருந்தினர் இவர்களிடம் பரிவுடனும், பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என நீதி போதிக்கப்பட்டுள்ளது.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் - - - (குறள் 52)
இல்லறத்திற்குத் தேவையான நற்பண்பு பெண்ணிடம் இல்லாவிட்டால் அவள் எவ்வளவு சிறப்புடையவளாக இருந்தாலும் பயனில்லை.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை - - - (குறள் 53)
மனைவி நற்குணம் பொருந்தியிருந்தால் வளமான வாழ்வு அமையும். மாறுபட்ட குணம் பொருந்திய மனைவி அமைந்தால் வாழ்க்கை பயனற்றதாகும். "நற்குணம் பொருந்திய மனைவி அமையாவிட்டால் வாழ்க்கை சூன்யமாகிவிடும். இந்தப் பண்பு மற்றும் நற்குணம் என்பது ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வரையறுத்துள்ளனர்". ஆண்களிடம் பண்பாட்டை எதிர்நோக்கும் சமூகம் அதை வற்புறுத்தவில்லை. ஆனால் பெண்களிடம் பண்பாட்டையும் மரபையும் வற்புறுத்தியுள்ளனர். பெண்களை இல்லத்திற்குரியவர்களாகக் கூறிவிட்டு இல்லச் சுமைகளிலிருந்து ஆண்கள் விலகிக் கொள்கின்றனர்.
பெண்ணை இழிவுபடுத்தல்
பெண்கள் இல்லத்தில் அடைபட்டுக் கிடப்பதால் அவர்களுக்கு வெளியுலக அனுபவம் இருப்பது இல்லை என்றும், ஆதலால் அவர்களிடம் சிந்தனைத் திறன் குறைவாக இருக்கும் என்றும், அவர்களின் பேச்சையோ கருத்தையோ கேட்டு நடப்பது கேடு விளையும் என ஆணாதிக்கச் சமூகத்தினர் கருதியுள்ளனர். அக்கருத்து குறளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது - - - (குறள் 901)
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடைய மாட்டார். கடமையை விரும்பியவர்க்கு வேண்டாத பொருளும் அதுவே எனக் கூறப்பட்டுள்ளது.
தையல் சொல் கேளேல் - - - (ஆத்திசூடி 62)
எதார்த்தத்திலும், இலக்கியங்களிலும் பெண்களுக்குக் கருத்துரிமை கொடுக்காமல் இல்லப் பொம்மையாகவே வைத்துள்ளனர். சமூகத்தில் பெண்களுக்கு எந்தவகையான மேன்மையும் கொடுக்காமல் அடித்தட்டு நிலைக்கே அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
"வள்ளுவப் பேராசானுக்கு அவன் காலத்து நிலப் பிரபுத்துவக் கருத்தான பெண், ஆண் ஏற்றத் தாழ்வுக் கருத்தைத் தாண்ட முடியவில்லை. அதற்கு முதல்தரமான எடுத்துக்காட்டு பெண் வழிச் சேரல் அதிகாரம்" எனப் ப. ஜீவானந்தம் கூறியுள்ளார். "வள்ளுவர் காலத்தில் அரசு தோன்றிவிட்டது. நிலவுடைமை அமைப்பு நிலைத்து விட்டது. வள்ளுவர் அரசுக்கும் நிலவுடைமை அமைப்புக்கும் சேவை செய்பவராகவே விளங்கினார். நிலவுடைமை அமைப்பை உடைக்க அவர் விரும்பவில்லை. அதை நிலைநாடட அரசனுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் அறிவுரை கூறினார்.
அதை உடைக்க விடாது காப்பதற்கு அறம் வகுத்தார். இவற்றால் நிலவுடைமைச் சமுதாயத்தைப் பேணுவதற்குத் திருக்குறள் இலக்கண நூலாக விளங்குகிறது. நிலவுடைமையை விரும்பியதால் ஆணாதிக்கக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளது. பெண்ணை இல்லாள் என்று கூறுகின்றனர். ஆனால் இல்லத்தின் நலனுக்கான ஆலோசனை கூறியதாகக் காட்டப்படவில்லை.
நிலவுடைமைச் சமூகத்தில் வாழ்ந்த திருவள்ளுவர் அச்சமூகத்தில் பெண்களுக்கு வரையறுக்கப்பட்ட கற்புக்கோட்டைப் பதிவு செய்துள்ளார். நிலவுடைமை வர்க்கத்தினர் அக்கோடபாட்டைச் சுயநலத்திற்காகத் தோற்றுவித்துள்ளனர் என ஆராயப்பட்டுள்ளது. குடும்பத்தில் உழைப்பை ஆண்களுக்குக் கொடுத்து மனைவியைக் கணவனைச் சார்ந்து வாழவைத்து, கணவனையே கடவுளாகவும் வணங்க வைத்துள்ளனர்.
இல்லத்தில் உள்ள பெண்களுக்கு மரபுகளை வலியுறுத்தி, ஆண்களுக்கு அம் மரபுகள் வலியுறுத்தப் படாமல் உள்ளதைக் குறள்வழிக் காண முடிகிறது. இல்லாள் எனக் கூறப்பட்ட பெண் இல்ல வளர்ச்சிக்கு எந்த ஆலோசனையும் கூறியதாகக் காட்டப்படவில்லை. திருவள்ளுவர் காட்டும் பெண்மை மரபைப் பின்பற்றும் பெண்மையாகவே அமைந்துள்ளது. பெண்ணியப் பார்வையில் இதனை ஆணாதிக்கச் சிந்தனையாகவே அறியமுடிகிறது.
Thursday, 28 March 2013 08:09
Published in phrases
Written by
Read more... 0
மனிதன் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து விட்டான்; வேற்றுக் கிரகங்களுக்குச் செல்லும் நிலைக்கும் வித்திட்டு விட்டான்; நினைத்தபடி எல்லாம் சாதித்து விட்டான்; நிழலான கற்பனைகளுக்கெல்லாம் கூட வடிவம் கொடுக்க ஆரம்பித்து விட்டான். மனிதனின் இத்தகைய வளர்ச்சியினால் சமுதாயத்தில் அவன் மதிப்பு நாளுக்குநாள் கூடி வருகிறது. சர்வதேசங்களிலும் அவன் சாதனை அளவிடற்கரியதாகிறது. மனிதன் மேலும் தன் அறிவாலும், ஆற்றலாலும் உலகைச் சுருக்கி, உலகுடன் ஒன்றி, முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவன் மருத்துவ அறிவியலின் துணைகொண்டு, புதிய உலகினைப் படைக்கும் முயற்சியில் பிறப்பு, இறப்பினைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு இயற்கைக்கு இணையான ஆற்றல் பெற்றவனாகவும் திகழ்கின்றான்.
இப்படி அவனது புறவாழ்க்கையில், எல்லாம் அவனது கைகளுக்குள் அடங்கி, அவனது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதாயுள்ளன. ஆனால் அவனது அகவாழ்க்கையில் அனைத்துமே அவன் கைகளை மீறிய நிலையில் அவனது கட்டுப்பாட்டிற்குள் அடங்காமலிருக்கின்றன. காரணம், புறவாழ்க்கையில் ஆண்-பெண் இருவரும் தங்களுக்குத் தேவையானவற்றைக் கற்று, பெற்று, அதன்படி நடக்கவும் செய்கின்றனர்; ஆனால் அக வாழ்க்கையில் வாழ்க்கைக்குத் தேவையான அறப் பண்புகளைக் கற்றுக் கொள்வதும் இல்லை; வளர்த்துக் கொள்வதும் இல்லை. அதிலிருக்கும் நியதிகளை ஏற்று நடந்து கொள்வதுமில்லை. இதன் காரணமாகத்தான் புறஉலகில் ஆயிரம் பேர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளும் அவர்களுக்கு அகவாழ்க்கையில் ஐந்து பேர்களுடன் கூடக் கூடி வாழமுடிவதில்லை.
இல்லறத்தின் மாண்பினைப் பேணாதவர்கள், புற உலகில் புகழினை நிலைநாட்டுவது என்பது நெருடலுக்கு இடம் கொடுப்பதாயுள்ளது.
நாம் பெரிய விருட்சமாக வானளாவி வளர்ந்துவிட்டாலும் கூட, அடிப்படையில் வேரிலிருந்து தோன்றியவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது; நாம் கிளையில் அமர்ந்துகொண்டு மரத்தை வெட்டுபவர்களாவும் விளங்கக் கூடாது. இச்செயல்கள் அனைத்தும் நமக்கே ஊறு விளைவிப்பதாகிவிடும். ஆகவே நாம் அடிப்படையில் பின்பற்றத் தவறிவிட்ட அறவுரைகளை ஏற்று, அறப்பண்புகளை வளர்த்து இல்லறம் என்னும் நல்லறத்தின் ஆரோக்கியத்தைப் பேணுபவர்களாக விளங்குதல் வேண்டும். இதன் மூலமே மனிதன் முழுமை பெற முடியும். இதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் அளவில் நம் கண்முன் வந்து நிற்பது திருக்குறள். இல்லற வாழ்வின் இனிமையை அறவுரையாக எடுத்துக் கூறும் நூல்கள் பல இருப்பினும், அவற்றுள் அன்றும் இன்றும், என்றும் எளிமையான, சிறந்த கருத்துகளை வழங்கி ஏற்றம் பெற உதவும் முதல் நூலாகத் திருக்குறள் விளங்குகிறதெனில் அது மிகையாகாது.
"மனிதனை மனிதனாக்கும்" முயற்சியினைத் திருக்குறள் மேற்கொண்டுள்ள காரணத்தினால்தான் அது இன்றைய வாழ்விற்கும் பொருந்துவதாகிறது. மனிதன் வாழும் காலந்தோறும் திருக்குறளுக்கு இடமுண்டு என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
கால மாற்றத்தின் விளைவாக அளவற்ற பலதரப்பட்ட நூல்களையும், அறிவியல், தொழில்நுட்ப நூல்களையும் படிக்கும் மனிதன், எளிய நூலான திருக்குறளைப் பழக்கத்தில் கொள்ளாமலிருப்பது வருந்தத்தக்கது. இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வாழும் மனிதன் மனநலத்தைப் பேண முடியாமல் பாதிப்பிற்குள்ளாகும் போது மன அமைதியைப் தேடி ஆன்மீகம், தியானம், யோகா என்று பலவற்றிலும் பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டுகிறான். திருக்குறள் போன்ற அறநூல்களைக் கைவிட்டதன் விளைவே இது.
இளமையிலிருந்தே இதைக் கைக்கொள்ளப் பெற்றிருந்தால் வளர்ந்த நிலைலில் வெவ்வேறு மனப் பயிற்சிகளை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. திருக்குறளைப் பள்ளி, கல்லூரியில் கற்றதோடு, பயன்படுத்தாமல் நிறுத்திவிட்டதால் தான், இன்று நாம், குடும்பம், சமுதாயம் என்றளவில் துன்பப்பட நேரிடுகின்றது. இத்துன்பத்தைக் களைந்திட நமக்கு இன்றும் துணைநிற்கிறது திருக்குறள்.
நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றைப் போக்கிக் கொள்ளவும், வாழும் நெறிமுறைகள் பற்றி அறிவுத் தெளிவினைப் பெறவும் "வாழ்வியல் ஆலோசனைகள்" வழங்கும் பெட்டகமாக இந்நூல் செயல்படுகிறது.
எந்தக் காலக்கட்டத்தில், எந்த இடத்தில், எத்தகைய மனிதர்கள் வாழ்ந்தாலும் அவர்களின் இயல்புகள், நடத்தைகள் இந்நூலில் உள்ளபடிதான் இருக்கமுடியும், இருக்க வேண்டும் என்பதை அன்றே உணர்ந்து எழுதியிருக்கிறார் தெய்வப்புலவர். மனிதனின் இன்றைய "ஹைக்கூ" கவிதை இரசனைக்கேற்ப அன்றே திருக்குறளைக் குறைந்த "அடிகளில் தந்து, நிறைந்த பொருள் தரும் அளவில் "வாமனனாக" உலகையே அளந்து நிற்கிறார் வள்ளுவப் பெருமான். இத்தகைய திருக்குறள் காட்டும் இல்லறம், இன்றைக்கும் பொருந்தும் நிலை இங்குச் சிறப்பாக ஆக்கம் பெறுகின்றது.
திருக்குறளில் தொட்ட இடமெல்லாம் வாழ்க்கை விளக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எனினும் "இல்லறவியலில்" இடம்பெற்றிருக்கும் 20 அதிகாரங்கள் இல்லறத்தின் நல்லறத்தை எடுத்தியம்புவதாகச் சிறப்புப் பெறுகின்றன. வள்ளுவரின் வழிநின்று வாழ்வோர்க்குக் குறள் காட்டும் "இல்லறம்" இன்று மட்டுமல்ல என்றும் நலம் பயப்பதாகவே அமையும் என்பது திண்ணம்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - - - (குறள் 41)
இக்குறள் கூறும் கருத்தாவது, ஒருவன், தன்னை நாடி நிற்கும் பெற்றோர், மனைவி, மக்களை நெறி தவறாமல் காக்கும் நிலையான, துணையாவான் என்று குறிப்பிடுகிறது. இன்றைய தலைவன் இல்லறக் கடமையைத் துறந்துவிட்டான்; அறத்தைக் கைவிட்டுவிட்டான்; தன்னை மறந்து தவறிழைக்க ஆரம்பித்து விட்டான். இதன் விளைவாகவே இந்நாளில், முதியோர் இல்லங்கள், மணமுறிவுகள், குழந்தைகள் "மறியிடைப்படுத்த மான்பிணை" போல வாழவேண்டிய நிலைமாறி அம்மாவிடம் சிறிது காலம், அப்பாவிடம் சிறிது காலம் என்று வாழும் அவலங்கள்... இப்படி அனைத்துமே நிகழ்கின்றன; இல்லறத்தின் ஆரோக்கியம் சிதைக்கப்படுகின்றது. ஆகவே இல்லறக் கடமை ஆற்றுபவர் நல்லறங்களை அறிந்து அதன் பண்பிலிருந்து விலகாமலிருக்கத் திருக்குறளின் சேவை இன்று மட்டுமல்ல என்றும் தேவை என்பது உணரப்படுகிறது.
அன்பு என்கின்ற பண்பையும், அறன் என்கின்ற பயனையும் சிறந்த இல்வாழ்க்கை மூலமாகவே அடைய முடியும். இதைத் தான்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - - - (குறள் 45)
என்று குறள் குறிப்பிடுகிறது. இத்தகைய அன்பும், அறனும் இன்றைய இல்லங்களில் பேணப்படாத காரணத்தாலே குடும்பங்களில் சண்டை, சச்சரவுகளும், குழந்தை வளர்ப்பில் சிக்கல்களும் நிறைந்து நிகழ்கால, எதிர்காலச் சமுதாயங்கள் பாதிப்புக்குள்ளாவதைக் காணமுடிகின்றது. மேலும் அன்பும், அறனும் கிடைக்கப் பெறாத நிலையில் இளைய சமூகத்தினர் மனமுறிவு, உளச்சிக்கல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்கள் அவர்களைத் திசை திருப்புவதாயும் உள்ளன. இதனால் வாழ்க்கைப் பயன், சமூகப் பயன் ஏதுமின்றி நாடு சிக்கல்களுக்கு ஆளாவதைக் காண முடிகின்றது. இதைத் தவிர்க்க நாம் குறளின் கருத்தை ஏற்று நடப்பதோடு அதை என்றும் போற்றிக் காக்க வேண்டும். இதை உணர்த்தும் வகையிலேயே அன்றைய நாளிலிருந்தே திருமண நிகழ்வின் போது வாழ்த்திற்குரிய பரிசுப்பொருளாக திருக்குறள் இடம் பெற்று வருவது அறியத்தக்கது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - - - (குறள் 50)
இக்குறளின் மூலம் நெறி தவறாமல் இல்லறத்தை மேற்கொண்டால் ஒருவன் தெய்வ நிலைக்கு ஒப்பவைத்து மதிக்கப்படுவான் என்பது உணர்த்தப்படுகிறது. தேவருலகையும், தெய்வ நிலையையும் தரும் இல்லறமாகிய நல்லறத்தைக் கால மாறுதலால், மனிதன் தலைகீழாய் மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தன்னைத்தானே தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டு இல்லறத்தில் பாழ்பட்டுக் கிடக்கின்றான். அத்துடன் இன்றைய சமூகத்தில் போலித்துறவிகள் தங்களைத் தெய்வத்திற்கு இணையாக வெளியுலகத்திற்குக் காட்டிக் கொண்டும், அக வாழ்க்கையில் தவறிழைத்துத் தண்டனை அனுபவிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். இத்தகைய போலித் துறவிகளிடம் வீழ்ந்து கிடக்கும் சமூகத்தினருக்கு விழிப்பு ஏற்படுத்தும் அளவிலும் திருக்குறள் வழிகாட்டுவதாகிறது. இதன்வழி சிறந்த இல்லறம் பேணாத நிலையில் இறைநிலைக்கு இடமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களை நெறிபடுத்தக் குறள் துணைநிற்பதைக் காண முடிகிறது.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் - - - (குறள் 52)
இக்குறளின் வழி இல்லறத்தை நடத்திச் செல்வதற்கு உதவும் பெண்களின் பெரும்பங்கு உரைக்கப்படுகிறது. இல்லறத்தைப் பேணும் அருங்குணங்கள் பெண்களிடம் இல்லாவிட்டால், அந்த இல்லத்தில் என்ன வளம் இருந்தாலும் அதனால் பயனில்லை என்பது உரைக்கப்படுகிறது. இன்றைய நிலையில் இல்லத்தின் மகிழ்ச்சி ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. வள்ளுவர் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம் இருவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. வள்ளுவர் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம் இருவருக்கும் பொதுவானதாகவே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இன்றைய நிலையில் ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமமாகப் பங்கு வகிக்கும் வாழ்க்கை இடம் பெறுகிறது. ஆண்-பெண் இருவரும் பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை, விருந்தோம்பல், அறம்பேணல் ஆகியவற்றை யார், யார் எப்பொழுது பின்பற்ற வேண்டுமோ அதை அப்பொழுது பின்பற்றிச் செயல்படுத்துதல் வேண்டும். இல்லறம் முழுமை பெற இருவரும் துணை நிற்க வேண்டும் என்னும் புதிய கருத்தினைப் பெறக் குறள் வழிகாட்டுவதாயுள்ளது.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - - - (குறள் 55)
இக்குறள் காட்டும் கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாய் உள்ளது. கணவனை மதித்து நடக்கும் மனைவியின்
பெருமையை இக்குறள் கூறுவதாய் உள்ளது. இந்நாளில் மனைவி கணவனைத் தொழ வேண்டும். மழையைப் பெற வேண்டும் என்பது கூட அவசியமில்லை. காரணம் இன்று அறிவின் துணைகொண்டு பெண்கள் ஆற்றும் கடமைகள் பலவாகப் பெருகிவிட்ட காரணத்தால், கணவனைப் போற்றிக் காத்து இல்லறக் கடமையாற்றுவதில் சில இடர்ப்பாடுகள் தோன்றவே செய்கின்றன. இவற்றிற்கிடையில் கணவனை மனிதனாக, அவன் உணர்வுகளை ஏற்று நடந்து, அவன் ஆற்றும் இல்லறக் கடமைக்குத் துணைநின்று, விட்டுக் கொடுத்து வாழும் பொறுமையான மனைவியாக ஒருத்தி விளங்கும் நிலையில் இல்லறத்தில் பூகம்பம் வெடிக்காமல் காக்கும் நிலைக்கு அவள் உயர்த்தப்படுவாள் என்பது தெளிவு. பெண்கள், அவர்களின் பெருமையை உணர்ந்து அதன்படி நடக்கத் திருக்குறள் இன்றும் தேவைப்படுகிறது.
சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை - - - (குறள் 57)
பெண்களை வீட்டில் அடைத்து வைத்துக் காப்பதால் அவர்களின் கற்பைக் காப்பாற்றிவிட முடியாது. அதை அவள் காக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. திருவள்ளுவரின் இக்குறளானது பெண்களின் இன்றைய நிலைக்கு மிகவும் பொருத்தமுடையதாகிறது. இன்றைய நிலையில் பெண் கல்வி மற்றும் பெண்கள் பணியாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து வெளியே அனுப்பாமல் இருப்பதும், ஆண்கள் குறுகிய நோக்கோடு பெண்களை வீணாகச் சந்தேகப்பட்டு அடைத்து வைத்துக் காப்பதும் தேவையில்லாதது ஆகிறது.
ஏனெனில், இன்று உலகமே வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியினுள் அடைப்பட்டுக் கிடக்கிறது. எனவே இன்றைய நிலையில் பெண்களை வீட்டினுள் அடைத்து வைத்திருந்தால் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலே அதிகமாயுள்ளது. இத்தகு நிலையில் நம் பண்பாடு, கலாச்சாரப் பெருமைகளை உளவியல் கல்வியாக அவர்களுக்குப் போதித்தும், வளர்ந்து வரும் சமூகத்திற்கு ஏற்பப் பாலியல் பாடத்தைச் சரியான முறையில் அவர்களுக்குக் கற்பித்தும், தங்களின் நிறைத்தன்மையினை அவர்களாகவே பேணும் அளவில் உருவாக்கியும் சமூகத்தை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும். இதுவே இன்றைய உலகிற்குப் பயனுடையதாய் இருக்கும் என்றளவில் குறள் விளக்கம் அமைந்து அதன் தேவையை உணர்த்துகின்றது.
இன்றைய மனிதனின் தேவைக்கு ஏற்ப, மனிதனை மனிதனாக்கும் கல்வி, சமுதாயக் கல்வி, இல்லறக் கல்வி, முதியோர் கல்வி, உளவியல் கல்வி, நாட்டுநலக் கல்வி ஆகிய பலவகையான கல்விக் கருத்துகளைத் திருக்குறள் எடுத்துக் கூறிச் சிறப்புப் பெறுவதாகிறது. வாழ்க்கையில் நமக்குச் சிக்கல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் தெளிவு பெறும் பொருட்டு, திருக்குறளை எடுத்து வள்ளுவர் கூறியுள்ள வழிவகைளை மேற்கொள்ளல் வேண்டும். இங்ஙனம் நாம் செயல்படும் போதுதான் திருக்குறள் உடல்நலம், மனநலம் பேணும் அருமருந்தாய் விளங்குவது தெரியவரும். இத்தகு முறையில் சமுதாய நலம் பேணும் திருக்குறள், அது போதிக்கும் பாடம், அதன் சேவை என்றென்றும் தேவை என்றளவில் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.
Friday, 28 September 2012 04:36
Published in phrases
Written by
Read more... 0
இயற்கை இன்னல்கள் பலவற்றையும் தாங்கிக் கொண்டு ஆண்டு முழுவதும் வயல்களில் உழைக்கும் உழவனின் பெருமையையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் உலகிற்கு பறை சாற்றும் மகத்தான திருநாள் தை பொங்கல் தினம் ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
ஒவ்வொரு விவசாயக் குடிமகனும் தங்கள் நிலங்களில் விளைந்த நெல், மஞ்சள், கரும்பு போன்றவற்றுடன் சர்க்கரை பொங்கல் படையல் வைத்து, மாவிலை தோரணம் கட்டி இயற்கையையும், சூரியனையும் வழிபடும் தமிழர் திருநாள் தை பொங்கல். தை பொங்கல் விழா தமிழர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், தமிழரின் வீரத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் முரட்டுக் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் தை மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும். ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
காளைகளை அடக்கும் திருவிழா ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற அயல்நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அது கூர்மையான வாளைக் கொண்டு காளையை காயப்படுத்தி அடக்கும் விளையாட்டுகளாகும். ஆனால் தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.
4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரீக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இந்த முத்திரை 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 2000ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.
இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
அதை கடந்த 1977ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்டது. இந்த முத்திரை கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்தது. இதை பாதுகாப்பாக வைத்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்தில் நடைமுறையில் இருந்த ஜல்லிக்கட்டை இந்த முத்திரை பிரதிபலிப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதில் உள்ள படத்தை வைத்து இருவிதமான கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசாரார் ஒரு காளை ஒன்றுக்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களை தூக்கி வீசுவதாக கூறுகிறார்கள். 2 வீரர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும், ஒரு வீரர் காளையை பிடிக்க முயல்வது போலவும், மற்றொருவர் பல்டி அடிப்பது போலவும், 5-வது நபர் தரையில் விழுந்து கிடப்பது போலவும் இந்த சித்திரம் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
தமிழர் இலக்கியத்தில் "கொல்லேறு தழுவல்" என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.
இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.
ஜல்லிக்கட்டு! தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றட்டும்.
Friday, 28 September 2012 04:36
Published in phrases
Written by
Read more... 0
வரலாறு நெடுகிலும் நம் தமிழ்த் தாய் ஆபத்துகள் சூழவே வாழ்ந்து வருகிறாள். ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தமிழுக்கு ஒரு புதிய ஆபத்து வந்துள்ளது. பெருந்திரளான தமிழ் மக்கள் இந்த ஆபத்தை உணரவில்லை என்பதால் இந்தப் புதிய ஆபத்து இன்னுங்கூட பெரிய ஆபத்தாகி விட்டது.சமற்கிருத, ஆங்கில, இந்தித் திணிப்புகளாலும், கலப்புகளாலும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்துள்ள தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துச் சில பல இழப்புகளுக்கும், சிதைப்புகளுக்கும் உள்ளான போதிலும் சீரிளமைத் திறங்குன்றாச் சிறப்பை அறவே இழந்து விடவில்லை நம் அன்னை.
இயற்கை மொழிகளின் மூல வடிவம் ஒலியே. வளர வளர வரப்பெற்று மொழிக்கு முழுமை தருவது வரி வடிவமாகும். தமிழுக்கே உரித்தான ஒலி வடிவத்தையும், வரி வடிவத்தையும் 'கிரந்த எழுத்துகள்' எனப்படுகிறவற்றைக் கொண்டு சிதைக்கும் முயற்சிகள் சில நூற்றாண்டுகள் முன்பே தொடங்கி விட்டன. இந்த முயற்சிகள் கணி உலகிலும் (கணிப்பொறி, கணினி, கணி) பரவி விட்டதுதான் இப்போது புதிய செய்தி. இச்செய்தியைப் புரிந்து கொள்வதற்குச் சில இலக்கண வரையறைகளை (விளக்கங்களை) அறிந்து கொள்ள வேண்டும்.
1) கிரந்த எழுத்துகள்: நமக்கு நன்கு தெரிந்த சில கிரந்த எழுத்துகள் ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவை. ஸ்ரீ ஆகியவை நாமறிந்த கிரந்தக் கூட்டெழுத்துகள். ஆனால், இவை மட்டுமல்ல, கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகளும் 34 மெய் எழுத்துகளும் உள்ளன.
கிரந்தம் ஒரு மொழியன்று. எழுத்து வடிவம் இல்லாத சமற்கிருத மொழியை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரி வடிவமே கிரந்தம். இதன் பிறப்பிடம் வடநாடன்று, தென்னாடே.
சமற்கிருதத்தின் இயல்பான வரி வடிவம் தேவநாகரி எழுத்துமுறையே ஆகும். இந்தி, குசராத்தி, மராத்தி, வங்கம் போன்ற பல வட இந்திய மொழிகளுக்கும் தேவநாகரியே சிற்சில மாறுபாடுகளுடன் எழுத்துமுறையாகப் பயன்படுகிறது - உரோமானிய எழுத்து முறையே ஆங்கிலம், பிரெஞ்சு, இசுப்பானியம் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வரி வடிவமாகப் பயன்படுவது போல.
ஆனால் தமிழுக்கென்று தனி எழுத்துமுறை உள்ளது. திராவிட மொழிக் குடும்பம் என்று தவறாகப் பெயரிட்டழைக்கப்படும் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி எழுத்து முறைகள் உள்ளன.
மலையாள மொழியானது வடமொழிக் கலப்புக்கு முழுமையாக இடமளிக்கும் பொருட்டு ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துகளைத் தன் நெடுங்கணக்கிலேயே இணைத்துக் கொண்டு விட்டது. தெலுங்கு, கன்னடம் பற்றி நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் மொழிக் கலப்பில் நாட்டம் கொண்டவர்கள் அல்லது அது பற்றிக் கவலைப்படாதவர்களான பல தமிழர்கள் கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதும் வழக்கம் இருந்தாலும், தமிழ் நெடுங்கணக்கில கிரந்தத்தை நாம் சேர்த்துக் கொள்ளவில்லை. கிரந்தம் இருந்தாலும் கிரந்தமாகவே இருக்கிறது, கலந்தாலும் கிரந்தரமாகவே கலக்கிறது.
இப்போது கணியுலக அளவிலாவது கிரந்தத்தைத் தமிழ்க் கணக்கிலும், தமிழைக் கிரந்தக் கணக்கிலும் சேர்க்க ஒரு முயற்சி நடைபெறுகிறது. இதையே தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து என்கிறோம். எப்படி? இந்தக் கேள்விக்குரிய விடையை விளங்கிக் கொள்ள இன்னுமொரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்படுகிறது. அதுவே ஒருங்குறி.
2) ஒருங்குறி: கணி(னி) வழியாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குத் தோதாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறை தேவைப்படுகிறது. இவ்வாறான பல எழுத்துமுறைகளை உள்ளடக்கிய பன்மொழி எழுத்துமுறைதான் ஒருங்குறி எனப்படுகிறது. உலக மொழிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் ஒரு தனிக் குறியீடு ஒதுக்கப்படுகிறது. இக்குறியீடு எல்லா வகைக் கணிகளிலும் ஒன்றாகவே இருக்கும்.
ஒருங்குறியில் கொரிய மொழிக்கு 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும், சீனம் உள்ளிட்ட மொழிக் குடும்பத்துக்கு 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறியீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மொழிகளில் எழுத்துகள் மிகுதியாய் இருப்பதே காரணம். தமிழ், மலையாளம், கன்னடம், ஒரியம், தேவநாகரி போன்ற எழுத்துமுறைகள் ஒவ்வொன்றுக்கும் 128 குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொழியல்லாத எழுத்து முறையாகிய கிரந்தத்துக்கு இதுவரை தனியிடம் தரப்படவில்லை.
ஒருங்குறி தொடர்பான பணிகளைச் செய்வது ஒருங்குறிச் சேர்த்தியம் (வாந ரு—€உழனந ஊழளெழசவரைஅ) என்னும் பன்னாட்டு அமைப்பு. அரசுகள், (மைக்ரோசாப்டு போன்ற) கணிக் குழுமங்கள், பிற நிறுவனங்கள், தனியாட்கள் இதில் உறுப்பு வகிக்கலாம். தமிழக அரசு முன்பு இதில் உறுப்பினராயிருந்து, பிறகு உறுப்புக் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தொடர்ந்து இதில் உறுப்பாய் இருந்து வருகிறது.
ஒருங்குறிக் கட்டமைப்பு என்பது பல்வேறு தளங்களால் ஆனது: (1) அடிப்படைப் பன்மொழித் தளத்தில் (Basic Multilingual Plane- BMP) தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. உலக அளவில் இப்போது வழக்கில் இருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குரிய எழுபதுக்கு மேற்பட்ட எழுத்துமுறைகளும் இத்தளத்தில்தான் உள்ளன. இவை தவிர அதிகமாகப் பயன்படும் எண்-குறிகள், கணிதக் குறிகள், சின்னங்கள், மீக்குறிகள் போன்றவையும் இதில் இடம் பெறுகின்றன.
(2) துணைப் பன்மொழித் தளத்தில் (Supplementary Multingual Plane - SMP) வழக்கொழிந்த மொழிகளின் எழுத்துக் குறிகளும், அரிதாகப் பயன்படும் எழுத்துக் குறிகளும், இசைக் குறிகளும், சிற்சில சின்னங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரலாற்று நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தளமாகும். துணைப் பன்மொழித் தளத்தோடு கூட துணைப் படமொழித் தளமும் (Supplementary Ideographic Plane) உள்ளது. தளங்கள் 3 முதல் 13 வரையிலானவை எதிர்காலப் பயன் பாட்டுக்குரியவை. தளம் 14 சிறப்புக் குறிகளுக்கானது. 15,16 ஆகிய தளங்கள் தனியார் பயன்பாட்டுக்குரியவை.  எல்லாத் தளங்களிலும் சேர்த்து மொத்தம் 11 இலக்கத்துக்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சொந்தப் பயன்பாட்டுக்குரியவை 1,13,000 ஆகும்.
ஒருங்குறிச் சேர்த்தியம் 1991ஆம் ஆண்டு தன் பணிகளைத் தொடங்கிய போதிலும், ஒருங்குறியைப் பயன்படுத்துவது 2000ஆம் ஆண்டுதான் தொடங்கியது.
ஒருங்குறி தோன்றிய போதே ஜ, ஸ, ஷ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டன. ஒருங்குறிச் சேர்த்தியம் யாரைக் கேட்டுக்கொண்டு இப்படிச் செய்தது என்று தெரியவில்லை. இந்த கிரந்த எழுத்துகளைத் தமிழர்கள் பரவலாகப் புழங்குவது தெரிந்ததே, பள்ளிக் குழந்தைகளுக்கான பாட நூல்களிலும் இந்த எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இந்த எழுத்துகளை ஏற்றுக் கொள்ளத் தமிழக அரசின் அரசாணையே உள்ளதாம்.
கிரந்தம் கலந்த தமிழ் எழுத்துமுறை சமற்கிருத, ஆங்கிலச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதுவதற்கு (எ-டு: ஜெயம், ஜூனியர்) உதவியாகவும் ஊக்கமாகவும் அமைந்து விட்டது. கிரந்தம் தேவைப்படாத பெயர்களைக் கூட கிரந்தம் கலந்து எழுதுவதைப் பார்க்கிறோம் (சஞ்சய் இவ்விதம் 'சஞ்ஜய்' ஆகி விடுகிறார். சங்கர் 'ஷங்கர்' ஆகிறார்). இதை விடவும் பெருங்கொடுமை தூய தமிழ்ச் சொற்களை எழுதுவதற்கே கூட கிரந்தத்தைப் பயன்படுத்துவதாகும். மதுக்கடை ஒன்றின் பெயர்ப் பலகை 'குறிஞ்ஜி வொய்ன்ஸ்' பருக அழைக்கிறது.
குறிஞ்சி கிரந்த போதையால் 'குறிஞ்ஜி' ஆகித் தள்ளாடக் காண்கின்றோம். மஞ்சள் வணிகத்தில் மார்வாடிகள் - குசராத்தி சேட்டுகள் நுழைந்திருப்பது போல் மஞ்சளில் கிரந்தம் நுழைந்து 'மஞ்ஜள்' ஆனாலும் அஞ்சற்க ('அஞ்ஜற்க'வோ)! கிரந்தமும் ஆங்கிலமும் சேர்ந்து தமிழை விலக்கி வைப்பதற்குச் சான்றாக, காவல்காரன் படத்துக்கு இரசிகர்கள் வைத்துள்ள விளம்பரத் தட்டி 'இளைய தளபதி விஜய்' என்று கொண்டாடுகிறது.
ஒருங்குறியில் நாமறிந்த ஜ, ஸ, ஷ, ஹ ஆகியவற்றோடு ஐந்தாவதாக நாம் இது வரை அறியாத ஒரு கிரந்த எழுத்தும் சேர்ந்து விட்டது. இந்த ஐந்தும் தமிழ் எழுத்துகளாகவே குறியிடப்பட்டிருப்பது பெருங்கொடுமை! இதற்கான முன்மொழிவை 'உத்தமம்' என்ற அமைப்பு அனுப்பியதாம்! அமெரிக்காவில் வாழும் தமிழர் - கணிஞர் நா.கணேசன் இதற்குத் தூண்டுதலாம்! இந்தக் கொடுமையை ஒருங்குறியைப் பாரத்துத்தான் தமிழறிஞர்களே தெரிந்து கொண்டார்களாம்! ஆனால் இணையத்தில் இந்த எழுத்தை இருவர் மட்டுமே பயன்படுத்தி வருவது ஆறுதலான செய்தி. இந்த இருவரில் ஒருவர் நா.கணேசன்!
உத்தமமும் நா.கணேசனும் ஒருங்குறிச் சேர்த்தியத்தில் உறுப்பினர்கள். இன்னோர் உறுப்பினர் தமிழ்நாட்டில் இருக்கும் சிறிரமணசர்மா. இவர் கொடுத்த முன்மொழிவு: 26 கிரந்தக் குறிகளை ஒருங்குறிக்குள் கொண்டு வந்து, அதனைத் 'தமிழ் நீட்சி' என அழைப்பதாகும். தமிழை இப்படி நீட்டினால்தான் சமற்கிருதம், சௌராட்டிரம் ஆகிய மொழிகளைத் தமிழ் வரி வடிவத்தில் எழுத முடியும் என்பது ரமணசர்மாவின் வாதம்.
சிறிரமணசர்மா 2010 சூலை 10ஆம் நாள் 'தமிழ் நீட்சி' முன்மொழிவைத் தந்தார். அது குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் கடைசி நாள் 25.10.2010. 'தமிழ் நீட்சி' முன்மொழிவையும் அதனால் எழக் கூடிய தீமைகளையும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வக்குமாரும் மற்றச் சிலரும் உலகறியச் செய்தார்கள். அதற்குள் அக்டோபர் திங்கள் பிற்பகுதியாகி விட்டது. பதறியெழுந்த தமிழறிஞர்கள் அவசரமாகத் தங்கள் மறுப்புக் கருத்துகளை ஒருங்குறிச் சேர்த்தியத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஒருங்குறி அறிஞர்களான மலேசியாவைச் சேர்ந்த திரு முத்து நெடுமாறனும், தமிழகத்தைச் சேர்ந்த திரு மணி மு.மணிவண்ணனும் நுணுக்கமான முறையில் ரமணசர்மாவின் முன்மொழிவை நொறுக்கி விட்டார்கள்.
எப்படியோ ஒரு வழியாக ஒருங்குறிச் சேர்த்தியம் ரமணசர்மாவின் 'தமிழ் நீட்சி'யை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரேயடியாக மறுத்து விட்டதா என்று இனிதான் தெரிய வேண்டும்.
சிறிரமணசர்மாவின் மற்றொரு முன்மொழிவு 68 கிரந்தக் குறிகளுக்கும் ஒருங்குறியில் தனி ஒதுக்கீடு கேட்பதாகும். இது தமிழுக்குள் கிரந்தத்தையோ கிரந்தத்துக்குள் தமிழையோ நுழைப்பதாக இல்லாத வரை நம் கவலைக்குரியதன்று. இந்த முன்மொழிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தள்ளி வைக்கப்பட்டதற்குக் காரணம் நா.கணேசனின் மற்றுமொரு முன்மொழிவாகும். 68 கிரந்தக் குறிகளோடு சேர்த்து எ, ஒ, ழ, ற, ன ஆகிய ஐந்தையும், எகர உயிர்மெய்க் குறி (—), ஒகர உயிர்மெய்க் குறி (— - ‘) ஆகிய இரண்டையும் சேர்த்து ஏழு தமிழ்க் குறிகளைக் கிரந்தத்துக்குள் சேர்த்து, 75 குறிகளைக் கொண்ட தமிழ் - கிரந்தக் கலவைக் குறியீட்டை உருவாக்குவதே அந்த முன்மொழிவு.
ரமணசர்மா தனது தனிக் கிரந்த ஒதுக்கீட்டை துணைப் பன்மொழித் தளத்தில் கேட்டார் என்றால், இளங்கோவனோ அடிப்படைப் பன்மொழித் தளத்தில் தனது கலவைக் குறியீட்டுக்கு இடம் கேட்டார்.கிரந்த சேவையில் ரமணசர்மாவுக்கும் நா.கணேசனுக்கும் நிகழ்ந்த போட்டா போட்டியால் முடிவெடுக்கத் திணறிய ஒருங்குறிச் சேர்த்தியம் இந்திய அரசின் உதவியை நாடியது. இந்திய அரசு தமிழக அரசையோ தமிழறிஞர்களையோ கலந்து கொள்ளாமலே தனது முன்மொழிவை அனுப்பியது. நா.கணேசன் கேட்ட 75 குறிகளுடன் வேறு சிலவற்றையும் சேர்த்து மொத்தம் 89 குறிகள் கொண்ட தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு வேண்டும் என்பது தில்லியின் முன்மொழிவு. இந்தக் கலப்படக் குறியீட்டை இந்திய மொழிகள் அனைத்துக்குமான பொது எழுத்து முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பது அதன் ஆசைக் கனவு.
இந்த முன்மொழிவு பற்றி முடிவெடுக்க 2010 நவம்பர் மாதம் ஒருங்குறிச் சேர்த்தியம் காத்திருந்த நிலையில்தான் தமிழறிஞர்களும் தமிழுணர்வாளர்களும் சீறிக் கிளம்பினர். முனைவர் இராம.கி., பேராசிரியர் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணியைச் சந்தித்து சிக்கலைச் எடுத்துரைக்க, அவர் தமிழக அரசை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தார். தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்தி முடிவைத் தள்ளிவைக்கச் செய்துள்ளது. 2011 பிப்ரவரி 7 வரை தமிழ்க் கட்சிக்கு அவகாசம் கிடைத்துள்ளது. தமிழக அரசு ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. வேறு எதற்கும் இல்லா விட்டாலும் சிக்கலைக் கிடப்பிலிட விசாரணைக்குழு பயன்படும் என்பது பட்டறிவு.
இம்முறை தமிழ் அறிஞர்கள், உணர்வாளர்களும், தமிழ் அமைப்புகளும் விழித்துக் கொண்டு விறுவிறுப்பாகச் செயல்படுவது நல்ல செய்தி. தாளாண்மை உழவர் இயக்கம் 2011 சனவரி 9ஆம் நாள் தஞ்சையில் கருத்தரங்கமும் பொதுக்கூட்டமும் நடத்தித் தமிழ் எழுத்துச் சிதைப்புக்கு எதிர்ப்பை ஒருமுகப்படுத்தியுள்ளது. 'ஒருங்குறித் தமிழ் - மெய்யும் மீட்பும்' என்ற அறிவூட்டும் கட்டுரைத் தொகுப்பையும் அது வெளியிட்டுள்ளது. தமிழ் உரிமைக் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் மக்கள் தொலைக்காட்சி சங்கப் பலகையில் ஒருங்குறி தொடர்பாக இலக்குவனார் திருவள்ளுவன், நாக.இளங்கோவன், இராம.கி. ஆகியோருடன் உரையாடல்கள் இடம்பெற்றன. நீதிமன்றத்தை அணுகும் திட்டமும் உள்ளது. பல்வேறு முனைகளிலும் தமிழ் காக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
ஆனால் விடைகாண வேண்டிய உயிர்க் கேள்வி ஒன்று உள்ளது.
தமிழுக்கு இப்படித் திடுமென ஆபத்துகள் கிளம்புவது ஏன்? ஏழுகோடித் தமிழ் மக்கள் பேசும் மொழியின் எழுத்துமுறையில் கிரந்தக் கலப்படம் செய்ய யாரோ ஒரு சர்மாவும் யாரோ ஒரு கணேசனும் முன்மொழிவதும், அதை மறுத்துத் தமிழ் அறிஞர்கள் மெனக்கெட்டு வாதிட்டுக் கொண்டிருப்பதும், அரசே இதற்கு ஒரு குழு அமைப்பதும்... இது என்ன கூத்து? ஒருங்குறியில் தமிழ் எழுத்துமுறைக்கு யார் பொறுப்பு? ஒருங்குறிச் சேர்த்தியம் என்ற பன்னாட்டு அமைப்பு தமிழ் எழுத்துமுறையில் சேர்க்கைகள் செய்ய முன்மொழிவுகள் வந்தால் அதைத் தமிழக அரசுக்கும், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும், செம்மொழி ஆய்வு மையத்திற்கும் தெரிவித்துக் கருத்துக் கேட்க வேண்டாமா? இந்திய அரசும் சேர்த்தியத்தின் முன்மொழிவுக்கு விடை தருமுன் தமிழக அரசைக் கேட்கத் தேவையில்லையா? தமிழின் ஒலி, வரி வடிவங்களைக் காக்கவும், மாற்றம் செய்ய வேண்டுமென்றால் உரியவாறு அதைச் செய்யவும் தமிழ்ப் புலவர் குழு, தமிழ்ப் பேரவை போன்ற நிலையான அமைப்புகள் தேவையில்லையா?
உலகில் தமிழனைப் போலவே அவன் பேசும் மொழியும் நாதியற்றுப் போய் விட்டதே! தமிழ்க் காப்பு, தமிழ் மீட்பு என்பது மொழித் தளத்தில் மட்டும் நிறைவேறக் கூடியதன்று. தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்தை வெல்வதோடு, வருமுன் காக்கும் சிந்தனையும் நமக்குத் தேவை.
Friday, 28 September 2012 04:36
Published in phrases
Written by
Read more... 0
Share on Myspace

Login

Register

*
*
*
*
*

* Field is required