HIGHLIGHTS
A+ R A-

திருக்குறளின் தேவை Featured

Rate this item
(1 Vote)
மனிதன் விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்து விட்டான்; வேற்றுக் கிரகங்களுக்குச் செல்லும் நிலைக்கும் வித்திட்டு விட்டான்; நினைத்தபடி எல்லாம் சாதித்து விட்டான்; நிழலான கற்பனைகளுக்கெல்லாம் கூட வடிவம் கொடுக்க ஆரம்பித்து விட்டான். மனிதனின் இத்தகைய வளர்ச்சியினால் சமுதாயத்தில் அவன் மதிப்பு நாளுக்குநாள் கூடி வருகிறது. சர்வதேசங்களிலும் அவன் சாதனை அளவிடற்கரியதாகிறது. மனிதன் மேலும் தன் அறிவாலும், ஆற்றலாலும் உலகைச் சுருக்கி, உலகுடன் ஒன்றி, முன்னேறிக் கொண்டிருக்கிறான். அவன் மருத்துவ அறிவியலின் துணைகொண்டு, புதிய உலகினைப் படைக்கும் முயற்சியில் பிறப்பு, இறப்பினைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு இயற்கைக்கு இணையான ஆற்றல் பெற்றவனாகவும் திகழ்கின்றான்.
இப்படி அவனது புறவாழ்க்கையில், எல்லாம் அவனது கைகளுக்குள் அடங்கி, அவனது ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதாயுள்ளன. ஆனால் அவனது அகவாழ்க்கையில் அனைத்துமே அவன் கைகளை மீறிய நிலையில் அவனது கட்டுப்பாட்டிற்குள் அடங்காமலிருக்கின்றன. காரணம், புறவாழ்க்கையில் ஆண்-பெண் இருவரும் தங்களுக்குத் தேவையானவற்றைக் கற்று, பெற்று, அதன்படி நடக்கவும் செய்கின்றனர்; ஆனால் அக வாழ்க்கையில் வாழ்க்கைக்குத் தேவையான அறப் பண்புகளைக் கற்றுக் கொள்வதும் இல்லை; வளர்த்துக் கொள்வதும் இல்லை. அதிலிருக்கும் நியதிகளை ஏற்று நடந்து கொள்வதுமில்லை. இதன் காரணமாகத்தான் புறஉலகில் ஆயிரம் பேர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளும் அவர்களுக்கு அகவாழ்க்கையில் ஐந்து பேர்களுடன் கூடக் கூடி வாழமுடிவதில்லை.
இல்லறத்தின் மாண்பினைப் பேணாதவர்கள், புற உலகில் புகழினை நிலைநாட்டுவது என்பது நெருடலுக்கு இடம் கொடுப்பதாயுள்ளது.
நாம் பெரிய விருட்சமாக வானளாவி வளர்ந்துவிட்டாலும் கூட, அடிப்படையில் வேரிலிருந்து தோன்றியவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது; நாம் கிளையில் அமர்ந்துகொண்டு மரத்தை வெட்டுபவர்களாவும் விளங்கக் கூடாது. இச்செயல்கள் அனைத்தும் நமக்கே ஊறு விளைவிப்பதாகிவிடும். ஆகவே நாம் அடிப்படையில் பின்பற்றத் தவறிவிட்ட அறவுரைகளை ஏற்று, அறப்பண்புகளை வளர்த்து இல்லறம் என்னும் நல்லறத்தின் ஆரோக்கியத்தைப் பேணுபவர்களாக விளங்குதல் வேண்டும். இதன் மூலமே மனிதன் முழுமை பெற முடியும். இதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் அளவில் நம் கண்முன் வந்து நிற்பது திருக்குறள். இல்லற வாழ்வின் இனிமையை அறவுரையாக எடுத்துக் கூறும் நூல்கள் பல இருப்பினும், அவற்றுள் அன்றும் இன்றும், என்றும் எளிமையான, சிறந்த கருத்துகளை வழங்கி ஏற்றம் பெற உதவும் முதல் நூலாகத் திருக்குறள் விளங்குகிறதெனில் அது மிகையாகாது.
"மனிதனை மனிதனாக்கும்" முயற்சியினைத் திருக்குறள் மேற்கொண்டுள்ள காரணத்தினால்தான் அது இன்றைய வாழ்விற்கும் பொருந்துவதாகிறது. மனிதன் வாழும் காலந்தோறும் திருக்குறளுக்கு இடமுண்டு என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
கால மாற்றத்தின் விளைவாக அளவற்ற பலதரப்பட்ட நூல்களையும், அறிவியல், தொழில்நுட்ப நூல்களையும் படிக்கும் மனிதன், எளிய நூலான திருக்குறளைப் பழக்கத்தில் கொள்ளாமலிருப்பது வருந்தத்தக்கது. இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வாழும் மனிதன் மனநலத்தைப் பேண முடியாமல் பாதிப்பிற்குள்ளாகும் போது மன அமைதியைப் தேடி ஆன்மீகம், தியானம், யோகா என்று பலவற்றிலும் பயிற்சி பெறுவதில் ஆர்வம் காட்டுகிறான். திருக்குறள் போன்ற அறநூல்களைக் கைவிட்டதன் விளைவே இது.
இளமையிலிருந்தே இதைக் கைக்கொள்ளப் பெற்றிருந்தால் வளர்ந்த நிலைலில் வெவ்வேறு மனப் பயிற்சிகளை நாடிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. திருக்குறளைப் பள்ளி, கல்லூரியில் கற்றதோடு, பயன்படுத்தாமல் நிறுத்திவிட்டதால் தான், இன்று நாம், குடும்பம், சமுதாயம் என்றளவில் துன்பப்பட நேரிடுகின்றது. இத்துன்பத்தைக் களைந்திட நமக்கு இன்றும் துணைநிற்கிறது திருக்குறள்.
நம் வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், சந்தேகங்கள் ஆகியவற்றைப் போக்கிக் கொள்ளவும், வாழும் நெறிமுறைகள் பற்றி அறிவுத் தெளிவினைப் பெறவும் "வாழ்வியல் ஆலோசனைகள்" வழங்கும் பெட்டகமாக இந்நூல் செயல்படுகிறது.
எந்தக் காலக்கட்டத்தில், எந்த இடத்தில், எத்தகைய மனிதர்கள் வாழ்ந்தாலும் அவர்களின் இயல்புகள், நடத்தைகள் இந்நூலில் உள்ளபடிதான் இருக்கமுடியும், இருக்க வேண்டும் என்பதை அன்றே உணர்ந்து எழுதியிருக்கிறார் தெய்வப்புலவர். மனிதனின் இன்றைய "ஹைக்கூ" கவிதை இரசனைக்கேற்ப அன்றே திருக்குறளைக் குறைந்த "அடிகளில் தந்து, நிறைந்த பொருள் தரும் அளவில் "வாமனனாக" உலகையே அளந்து நிற்கிறார் வள்ளுவப் பெருமான். இத்தகைய திருக்குறள் காட்டும் இல்லறம், இன்றைக்கும் பொருந்தும் நிலை இங்குச் சிறப்பாக ஆக்கம் பெறுகின்றது.
திருக்குறளில் தொட்ட இடமெல்லாம் வாழ்க்கை விளக்கங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எனினும் "இல்லறவியலில்" இடம்பெற்றிருக்கும் 20 அதிகாரங்கள் இல்லறத்தின் நல்லறத்தை எடுத்தியம்புவதாகச் சிறப்புப் பெறுகின்றன. வள்ளுவரின் வழிநின்று வாழ்வோர்க்குக் குறள் காட்டும் "இல்லறம்" இன்று மட்டுமல்ல என்றும் நலம் பயப்பதாகவே அமையும் என்பது திண்ணம்.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - - - (குறள் 41)
இக்குறள் கூறும் கருத்தாவது, ஒருவன், தன்னை நாடி நிற்கும் பெற்றோர், மனைவி, மக்களை நெறி தவறாமல் காக்கும் நிலையான, துணையாவான் என்று குறிப்பிடுகிறது. இன்றைய தலைவன் இல்லறக் கடமையைத் துறந்துவிட்டான்; அறத்தைக் கைவிட்டுவிட்டான்; தன்னை மறந்து தவறிழைக்க ஆரம்பித்து விட்டான். இதன் விளைவாகவே இந்நாளில், முதியோர் இல்லங்கள், மணமுறிவுகள், குழந்தைகள் "மறியிடைப்படுத்த மான்பிணை" போல வாழவேண்டிய நிலைமாறி அம்மாவிடம் சிறிது காலம், அப்பாவிடம் சிறிது காலம் என்று வாழும் அவலங்கள்... இப்படி அனைத்துமே நிகழ்கின்றன; இல்லறத்தின் ஆரோக்கியம் சிதைக்கப்படுகின்றது. ஆகவே இல்லறக் கடமை ஆற்றுபவர் நல்லறங்களை அறிந்து அதன் பண்பிலிருந்து விலகாமலிருக்கத் திருக்குறளின் சேவை இன்று மட்டுமல்ல என்றும் தேவை என்பது உணரப்படுகிறது.
அன்பு என்கின்ற பண்பையும், அறன் என்கின்ற பயனையும் சிறந்த இல்வாழ்க்கை மூலமாகவே அடைய முடியும். இதைத் தான்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - - - (குறள் 45)
என்று குறள் குறிப்பிடுகிறது. இத்தகைய அன்பும், அறனும் இன்றைய இல்லங்களில் பேணப்படாத காரணத்தாலே குடும்பங்களில் சண்டை, சச்சரவுகளும், குழந்தை வளர்ப்பில் சிக்கல்களும் நிறைந்து நிகழ்கால, எதிர்காலச் சமுதாயங்கள் பாதிப்புக்குள்ளாவதைக் காணமுடிகின்றது. மேலும் அன்பும், அறனும் கிடைக்கப் பெறாத நிலையில் இளைய சமூகத்தினர் மனமுறிவு, உளச்சிக்கல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்கள் அவர்களைத் திசை திருப்புவதாயும் உள்ளன. இதனால் வாழ்க்கைப் பயன், சமூகப் பயன் ஏதுமின்றி நாடு சிக்கல்களுக்கு ஆளாவதைக் காண முடிகின்றது. இதைத் தவிர்க்க நாம் குறளின் கருத்தை ஏற்று நடப்பதோடு அதை என்றும் போற்றிக் காக்க வேண்டும். இதை உணர்த்தும் வகையிலேயே அன்றைய நாளிலிருந்தே திருமண நிகழ்வின் போது வாழ்த்திற்குரிய பரிசுப்பொருளாக திருக்குறள் இடம் பெற்று வருவது அறியத்தக்கது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - - - (குறள் 50)
இக்குறளின் மூலம் நெறி தவறாமல் இல்லறத்தை மேற்கொண்டால் ஒருவன் தெய்வ நிலைக்கு ஒப்பவைத்து மதிக்கப்படுவான் என்பது உணர்த்தப்படுகிறது. தேவருலகையும், தெய்வ நிலையையும் தரும் இல்லறமாகிய நல்லறத்தைக் கால மாறுதலால், மனிதன் தலைகீழாய் மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தன்னைத்தானே தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டு இல்லறத்தில் பாழ்பட்டுக் கிடக்கின்றான். அத்துடன் இன்றைய சமூகத்தில் போலித்துறவிகள் தங்களைத் தெய்வத்திற்கு இணையாக வெளியுலகத்திற்குக் காட்டிக் கொண்டும், அக வாழ்க்கையில் தவறிழைத்துத் தண்டனை அனுபவிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். இத்தகைய போலித் துறவிகளிடம் வீழ்ந்து கிடக்கும் சமூகத்தினருக்கு விழிப்பு ஏற்படுத்தும் அளவிலும் திருக்குறள் வழிகாட்டுவதாகிறது. இதன்வழி சிறந்த இல்லறம் பேணாத நிலையில் இறைநிலைக்கு இடமில்லை என்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களை நெறிபடுத்தக் குறள் துணைநிற்பதைக் காண முடிகிறது.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல் - - - (குறள் 52)
இக்குறளின் வழி இல்லறத்தை நடத்திச் செல்வதற்கு உதவும் பெண்களின் பெரும்பங்கு உரைக்கப்படுகிறது. இல்லறத்தைப் பேணும் அருங்குணங்கள் பெண்களிடம் இல்லாவிட்டால், அந்த இல்லத்தில் என்ன வளம் இருந்தாலும் அதனால் பயனில்லை என்பது உரைக்கப்படுகிறது. இன்றைய நிலையில் இல்லத்தின் மகிழ்ச்சி ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. வள்ளுவர் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம் இருவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. வள்ளுவர் குறிப்பிடும் வாழ்க்கைத் துணைநலம் இருவருக்கும் பொதுவானதாகவே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இன்றைய நிலையில் ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமமாகப் பங்கு வகிக்கும் வாழ்க்கை இடம் பெறுகிறது. ஆண்-பெண் இருவரும் பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை, விருந்தோம்பல், அறம்பேணல் ஆகியவற்றை யார், யார் எப்பொழுது பின்பற்ற வேண்டுமோ அதை அப்பொழுது பின்பற்றிச் செயல்படுத்துதல் வேண்டும். இல்லறம் முழுமை பெற இருவரும் துணை நிற்க வேண்டும் என்னும் புதிய கருத்தினைப் பெறக் குறள் வழிகாட்டுவதாயுள்ளது.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை - - - (குறள் 55)
இக்குறள் காட்டும் கருத்து எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாய் உள்ளது. கணவனை மதித்து நடக்கும் மனைவியின்
பெருமையை இக்குறள் கூறுவதாய் உள்ளது. இந்நாளில் மனைவி கணவனைத் தொழ வேண்டும். மழையைப் பெற வேண்டும் என்பது கூட அவசியமில்லை. காரணம் இன்று அறிவின் துணைகொண்டு பெண்கள் ஆற்றும் கடமைகள் பலவாகப் பெருகிவிட்ட காரணத்தால், கணவனைப் போற்றிக் காத்து இல்லறக் கடமையாற்றுவதில் சில இடர்ப்பாடுகள் தோன்றவே செய்கின்றன. இவற்றிற்கிடையில் கணவனை மனிதனாக, அவன் உணர்வுகளை ஏற்று நடந்து, அவன் ஆற்றும் இல்லறக் கடமைக்குத் துணைநின்று, விட்டுக் கொடுத்து வாழும் பொறுமையான மனைவியாக ஒருத்தி விளங்கும் நிலையில் இல்லறத்தில் பூகம்பம் வெடிக்காமல் காக்கும் நிலைக்கு அவள் உயர்த்தப்படுவாள் என்பது தெளிவு. பெண்கள், அவர்களின் பெருமையை உணர்ந்து அதன்படி நடக்கத் திருக்குறள் இன்றும் தேவைப்படுகிறது.
சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை - - - (குறள் 57)
பெண்களை வீட்டில் அடைத்து வைத்துக் காப்பதால் அவர்களின் கற்பைக் காப்பாற்றிவிட முடியாது. அதை அவள் காக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. திருவள்ளுவரின் இக்குறளானது பெண்களின் இன்றைய நிலைக்கு மிகவும் பொருத்தமுடையதாகிறது. இன்றைய நிலையில் பெண் கல்வி மற்றும் பெண்கள் பணியாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து வெளியே அனுப்பாமல் இருப்பதும், ஆண்கள் குறுகிய நோக்கோடு பெண்களை வீணாகச் சந்தேகப்பட்டு அடைத்து வைத்துக் காப்பதும் தேவையில்லாதது ஆகிறது.
ஏனெனில், இன்று உலகமே வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியினுள் அடைப்பட்டுக் கிடக்கிறது. எனவே இன்றைய நிலையில் பெண்களை வீட்டினுள் அடைத்து வைத்திருந்தால் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படும் சூழலே அதிகமாயுள்ளது. இத்தகு நிலையில் நம் பண்பாடு, கலாச்சாரப் பெருமைகளை உளவியல் கல்வியாக அவர்களுக்குப் போதித்தும், வளர்ந்து வரும் சமூகத்திற்கு ஏற்பப் பாலியல் பாடத்தைச் சரியான முறையில் அவர்களுக்குக் கற்பித்தும், தங்களின் நிறைத்தன்மையினை அவர்களாகவே பேணும் அளவில் உருவாக்கியும் சமூகத்தை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும். இதுவே இன்றைய உலகிற்குப் பயனுடையதாய் இருக்கும் என்றளவில் குறள் விளக்கம் அமைந்து அதன் தேவையை உணர்த்துகின்றது.
இன்றைய மனிதனின் தேவைக்கு ஏற்ப, மனிதனை மனிதனாக்கும் கல்வி, சமுதாயக் கல்வி, இல்லறக் கல்வி, முதியோர் கல்வி, உளவியல் கல்வி, நாட்டுநலக் கல்வி ஆகிய பலவகையான கல்விக் கருத்துகளைத் திருக்குறள் எடுத்துக் கூறிச் சிறப்புப் பெறுவதாகிறது. வாழ்க்கையில் நமக்குச் சிக்கல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் தெளிவு பெறும் பொருட்டு, திருக்குறளை எடுத்து வள்ளுவர் கூறியுள்ள வழிவகைளை மேற்கொள்ளல் வேண்டும். இங்ஙனம் நாம் செயல்படும் போதுதான் திருக்குறள் உடல்நலம், மனநலம் பேணும் அருமருந்தாய் விளங்குவது தெரியவரும். இத்தகு முறையில் சமுதாய நலம் பேணும் திருக்குறள், அது போதிக்கும் பாடம், அதன் சேவை என்றென்றும் தேவை என்றளவில் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.
Share on Myspace

Login

Register

*
*
*
*
*

* Field is required